காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் களை கட்டிய பாரம்பரிய மீன்பிடி திருவிழா
காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா களை கட்டியது. கண்மாயில் இறங்கி மீன்களை கிராம மக்கள் அள்ளினர்.
காரைக்குடி,
காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா களை கட்டியது. கண்மாயில் இறங்கி மீன்களை கிராம மக்கள் அள்ளினர்.
மீன்பிடி திருவிழா
காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செவரக்கோட்டை கிராமத்தில் நெடுவா கண்மாயில் பாரம்பரிய முறையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் செவரக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் ஊத்தா கூடை, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர். முன்னதாக ஊர் தலைவர் கொடியசைத்து தொடங்கியதும் அங்கு வலை மற்றும் ஊத்தாவுடன் காத்திருந்த கிராம மக்கள் வேகமாக ஓடிச் சென்று கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்க தொடங்கினர். அங்கு ஜிலேபி, கெண்டை, முரல் உள்ளிட்ட மீன்களை அள்ளினர்.
பூலாங்குறிச்சி
இதேபோல் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தில் உள்ள கண்ணாடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பூலாங்குறிச்சி, துவார், திருக்கோளக்குடி, ஆத்திரம்பட்டி, செவ்வூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் கலந்துகொண்டு ஊத்தா கூடை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். இவ்வாறு விரால், கட்லா, ஜிலேபி, கெளுத்தி, ரோகு உள்ளிட்ட மீன்களை அவர்கள் அள்ளிச் சென்றனர்.
சின்னமருதி
சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி கிராமத்தில் உள்ள சின்னமருதி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது, காலை 8 மணிக்கு கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைக்கொடி வீச மருதிபட்டி, அரளிப்பட்டி, சிங்கமலப்பட்டி, திருக்களாப்பட்டி, எஸ்.வி. மங்கலம், முறையூர், முத்துச்சாமிபட்டி, சூரக்குடி போன்ற பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பல வகை வலைகளை பயன்படுத்தி மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு போட்டி போட்டுக்கொண்டு மீன்களைப் பிடித்துச் சென்றனர்.. கெளுத்தி, ஜிலேபி, விரால், குரவை, ஜல்லிக்கெண்டை ஆகிய மீன்கள் அதிக அளவில் பிடிபட்டது. இதனால் மீன்பிடி திருவிழா நடந்த கிராமங்கள் முழுவதும் மீன் குழம்பு வாசனை கமகமக்கும் வகையில் இருந்தது.
Related Tags :
Next Story