கொங்குனீசுவரர் கோவிலை புதுப்பித்து பராமரிக்க வேண்டும்


கொங்குனீசுவரர் கோவிலை புதுப்பித்து பராமரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 April 2022 11:47 PM IST (Updated: 25 April 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே கடத்தூரில் அமைந்துள்ள கொங்குனீசுவரர் கோவிலை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே கடத்தூரில் அமைந்துள்ள கொங்குனீசுவரர் கோவிலை புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கொங்குனீசுவரர் கோவில்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் கொழுமம் தொடங்கி காரத்தொழுவு வரை சைவ, வைணவ கோவில்கள் பல உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் ஆட்சி காலத்தில், கோவில்கள் கட்டும் பணியில் மன்னர்கள் அதிக ஆர்வம் காட்டினர். மதங்களை வளர்க்கவும், வேண்டுதல்களுக்காகவும், தங்கள் ஆட்சி எல்லைகளை வரையறை செய்யவும் இதுபோல் கோவில்கள் கட்டப்பட்டன.
இந்தக் கோவில்கள் ஒவ்வொன்றும் கட்டிடக் கலையின் சிறப்புகளை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்புகளை ஏற்படுத்தினர். இதில் முக்கியமானதாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கடத்தூர் கொங்குனீஸ்வரர் கோவில் உள்ளது. 
கொங்கு மண்டலத்தில் சிவன் எழுந்தருளி உள்ளதை குறிப்பிடும் வகையில் கொங்கு என்ற அடைமொழியோடு இந்த கோவில் அமைந்துள்ளது. முழுவதும் கருங்கற்களை மட்டுமே பயன்படுத்தி 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
சிதிலமடைந்துள்ளது
பலநூறு ஆண்டுகள் கடந்த நிலையில், பராமரிப்பு இல்லாத காரணத்தால் தற்போது மேற்கூரை, சுற்றுச்சுவர், கோவில் உட்பகுதி அனைத்தும் சிதிலமடைந்துள்ளது. கோவில் வளாகம் முழுவதும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன.
இதுகுறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
‘‘சுரங்கப்பாதை இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்றாகும். 2 கி.மீ. தொலைவில் உள்ள அர்ச்சுனேஸ்வரர் கோவில் கருவறையிலிருந்து இந்தக் கோவில் வரை சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுகிறது. கோவில் சுவற்றில் பலவித தகவல்களை குறிப்பிடும் கல்வெட்டுக்கள் உள்ளன. பக்தர்கள் சிலர் கோவில் முன்பகுதியில் சூடம் பத்தி ஏற்றி வழிபடுகின்றனர். 
பராமரிக்க வேண்டும்
கடத்தூர் அமராவதி ஆற்றங்கரை அருகே உள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு இந்த கோவிலை புதுப்பித்து பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்".
இ்வ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story