தந்தை, மகன் கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 25 April 2022 11:49 PM IST (Updated: 25 April 2022 11:49 PM IST)
t-max-icont-min-icon

தந்தை, மகன் கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கரூர்,
ஏரி ஆய்வு
கரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் அந்த ஊராட்சிக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்புகளை மீட்டுத்தரக் கோரியும் வக்கீல் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக வந்தனர். 
அப்போது அப்பகுதியில் விவசாயம் செய்து வந்த இனாம் புலியூரை சேர்ந்த பொதுநல ஆர்வலர் வீரமலை (வயது 60), அவருடைய மகன் நல்லதம்பி (42) ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.
10 பேர் சரண்
இதனையடுத்து அந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்த சிலர் ஆத்திரமடைந்து வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பியை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 
இதையடுத்து இரட்டைக் கொலை தொடர்பாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த சவுந்தரராஜன் என்கிற பெருமாள் (35), ஜெயகாந்தன் (23), சசிகுமார் (35), ஸ்டாலின் (28)், பிரபாகரன் (30), பிரவீன்குமார் (32), கவியரசு, சண்முகம், ஹரிஹரன், நடராஜன் ஆகிய 10 பேரும் மதுரை மற்றும் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து இவர்களை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.
இரட்டை ஆயுள் தண்டனை
இந்த வழக்கு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில் இதற்கான தீர்ப்பினை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட சவுந்தரராஜன் என்கிற பெருமாள், ஜெயகாந்தன், சசிகுமார், ஸ்டாலின், பிரபாகரன், பிரவீன்குமார் ஆகிய 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், முதல் குற்றவாளியான சவுந்தரராஜன் என்கிற பெருமாள் ரூ.3 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், மேலும் குற்றவாளிகள் 6 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
போலீசார் குவிப்பு
மேலும் வழக்கில் தொடர்புடைய கவியரசன், சண்முகம், ஹரிஹரன், நடராஜன் ஆகிய 4 பேருக்கும்  போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பால் நேற்று காலையில் இருந்து கரூர் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story