கரூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க மறுப்பு
கரூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. குளித்தலையில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
குளித்தலை,
பெட்ரோல் வழங்கப்படவில்லை
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்திருந்தார். அதன்படி ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என மாவட்ட பெட்ரோலிய வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று குளித்தலை பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவில்லை. ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுமென அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் ஹெல்மெட் அணிந்த நிலையில் இருந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கினர். ஹெல்மெட்டை கழற்றி கைகளில் வைத்திருந்ததால் அதை அணிய செய்து அதன் பின்னரே பெட்ரோல் வழங்கினர்.
அபராதம்
ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட முடியாமல் திரும்பிச் சென்றனர். சிலர் ஹெல்மெட் உடன் பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட்டை வாங்கி அணிந்து கொண்டு தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு சென்றனர்.
மேலும் நேற்று குளித்தலை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கி அபராதம் விதித்தனர்.
இதேபோல் கரூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ெஹல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படவில்லை.
Related Tags :
Next Story