மாரியம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 26 April 2022 12:30 AM IST (Updated: 26 April 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி, நொய்யல் பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரவக்குறிச்சி, 
சித்திரை திருவிழா
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 
கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பாதிப்பினால் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம்  தொடங்கியது. 
ஊர்வலம்
நேற்று அதிகாலை பொதுமக்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து கொண்டு மகாமாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து திருவிழா 2 வாரங்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகளும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டன.
நொய்யல்
நொய்யல் அருகே அத்திப்பாளையம் கிராமம் பல்லா குளத்துப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சூடுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
நேற்று காலை மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். பின்னர் மாரியம்மனுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் வாணவேடிக்கை நடைபெற்றது. இன்று (ெசவ்வாய்க்கிழமை) காலை கிடா வெட்டு பூஜை, மாலை அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story