வைத்திலிங்கம் மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார்
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக வைத்திலிங்கம் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் கடும் போட்டி நிலவி வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக வைத்திலிங்கம் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் கடும் போட்டி நிலவி வருகிறது.
அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. வார்டு, கிளைக்கழகம், ஒன்றியம், நகரம், பேரூர், மாநகராட்சி பகுதி என ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக மாவட்ட நிர்வாகிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.
தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிங்காரம், முன்னாள் வாரிய தலைவர் பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. ேதர்தல் பொறுப்பாளர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
போட்டியின்றி தேர்வாகிறார்
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் வைத்திலிங்கத்தை தவிர வேறு யாரும் மாவட்ட செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் வைத்திலிங்கம் மீண்டும் மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு முதல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை வடக்கு மாவட்டம்
தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த துரைக்கண்ணு மரணம் அடைந்ததை தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் பொறுப்பாளராக அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் புரசை வி.பாபு, ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் சீனிவாசன், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஆகியோர் செயல்பட்டனர்.
கடும் போட்டி
இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் எம்.பி. பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ரெத்தினசாமி, ராம.ராமநாதன், பகுதி செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், அசோக்குமார், செந்தில் உள்பட 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனால் வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story