மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாடகை செலுத்தாத இடங்கள் ஆய்வு


மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாடகை செலுத்தாத இடங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 26 April 2022 12:55 AM IST (Updated: 26 April 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

மதுரை செல்லூர் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாடகை செலுத்தாத இடங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.

மதுரை, 
மதுரை செல்லூர் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாடகை செலுத்தாத இடங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.
 கோவில்
மதுரை வைகை வடகரையில் செல்லூர் பகுதியில் பழமை வாய்ந்த திருவாப்புடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்தது. மேலும் இந்த கோவிலுக்கு பங்குனி உத்திரத்தன்று மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமி அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை சுற்றிலும் கோவிலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்  தி.மு.க. அரசு கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அதனை மீட்டு மீண்டும் கோவில் வசம் கொண்டு வரவேண்டும் என்றும், மேலும் வாடகை பாக்கி, வாரிசுதாரர்கள் மாற்றம், மற்றவர் களுக்கு விற்பனை செய்த இடங்களையும் ஆய்வு செய்து அதனையும் கோவில் வசம் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 
ஆய்வு
அதை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்யும் பணியும், வாடகை செலுத்தாத இடங்களை கண்டறியும் பணியும் தொடங்கியது. வாடகை செலுத்த இடங்கள் அளவிடும் பணி, அதன்படி செல்லூர் திருவாப்புடையார் கோவிலுக்கு அருகில் கீழ தோப்பு பகுதியில் உள்ள இடங்களில் இருந்தவர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வாடகை செலுத்தி வந்து உள்ளனர். 
ஆனால் காலபோக்கில் வைகை ஆற்றின் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் பல ஆண்டு களுக்கு முன்பு இருந்தவர்கள் அந்த பகுதியை வேறு நபர்களுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தற்போது தெரியவந்தது.
மேலும் அந்த பகுதியில் உள்ள சுமார் 52 வீடுகள் கட்டப் பட்டுள்ள இடங்கள் கோவிலுக்கு சொந்தமானது என்பது கண்டு பிடிக்கப்பட்டது. 
அளவிடும் பணி
அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் யஞ்ஞநாராயணன் தலைமையில் கோவில் கண்காணிப் பாளர்கள், பணியாளர்கள் மற்றும் அளவிடும் பணியாளர்கள் ஆகியோர் நேற்று காலை செல்லூர் பகுதியில் கோவில் இடங்களை அளவிடும் பணியை தொடங்கினர். 
இதன் மூலம் கோவில் இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்த வீடுகளுக்கு எவ்வளவு வாடகை வசூலிப்பது என்பது குறித்து கோவில் நிர்வாகம் முடிவு செய்து அவர்களுக்கு கூடிய விரைவில் தெரிவிக்கும். இதன் மூலம் கோவிலுக்கு லட்சக் கணக்கில் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிடும் பணியால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் குழப்பம்
இதற்கிடையில் அந்த பகுதி மக்கள் கூறும் போது, தாங்கள் மாநகராட்சிக்கு வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி, குழாய் வரி போன்றவற்றை செலுத்தி வருகிறோம். மேலும் நாங்கள் இந்த இடத்தை பல ஆண்டுகளுக்கு பின்பு வேறு ஒருவரிடம் இருந்து வாங்கியுள்ளோம். அது கோவில் இடம் என்பது அப்போது எங்களுக்கு தெரியாது. ஆனால் திடீரென்று கோவில் பணியாளர்கள் வந்து இது கோவிலுக்கு சொந்தமான இடம். அந்த இடத்திற்கு வாடகை செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே நாங்கள் எத்தனை வரிகளை செலுத்துவது என்று குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.

Next Story