கலெக்டர் அலுவலகத்தை கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 April 2022 1:46 AM IST (Updated: 26 April 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள்முற்றுகையிட்டனர்.

தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் முற்றுகையிட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அடிப்படை வசதி, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். 

தென்காசி மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் விவசாய நலச்சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது:-

நாங்கள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட கொட்டகை மூலம் விவசாய உப தொழிலாக கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுமத்துடன் வளர்ப்பு தொகை ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தேங்காய், மஞ்சள், கரி மூட்டை போன்ற இடுபொருட்கள் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பணியாட்களின் கூலி உயர்வு, தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் முறைப்படுத்தப்படாத குறைந்தபட்ச வளர்ப்பு தொகை உள்ளிட்ட காரணங்களால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளோம். இதுகுறித்து ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியும் பேச்சுவார்த்தை ஏற்படவில்லை. எனவே தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்டித்து எங்களது வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு வருகிற 29-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊரின் எல்கையை மாற்றவேண்டும்

கடையநல்லூர் தாலுகா சுந்தரேசபுரம் வார்டு உறுப்பினர் காளி பாண்டி தலைமையில் பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், “நாங்கள் சுந்தரேசபுரம் கிராமத்தில் வசித்து வருகிறோம். ஆனால் முகவரிகள் அனைத்தும் போகநல்லூர் கிராமத்தில் அரசு ஆவணத்தில் உள்ளது. நாங்கள் கட்டியிருக்கும் 50 வீடுகளின் எல்லை அரியநாயகிபுரம் கிராமத்து எல்கையில் இருப்பதால் அரசு நலத்திட்ட உதவிகள் எதுவும் பெற முடியவில்லை. 

மேலும் குடிநீர், தெருவிளக்கு பழுது ஏற்பட்டால் எந்த கிராமத்திலும் முறையிட முடியவில்லை. எனவே எங்களை போகநல்லூர் பஞ்சாயத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story