சேலம் மாநகராட்சியில் பெரியார் பேரங்காடி, ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் பெரியார் பேரங்காடி மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
சேலம்:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் பெரியார் பேரங்காடி மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் பேரங்காடி வணிக வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.18.10 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படும் நிலையில் உள்ளது. இந்த பேரங்காடி 3,368.71 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. 5 தளங்கள் கொண்ட இந்த பேரங்காடி வணிக உபயோகத்திற்கான பிரத்தியேக இடவசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்த பேரங்காடியை நேற்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேரங்காடி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.33 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நேரு கலையரங்க கட்டுமான பணியையும் ஆய்வு செய்தார்.
ஈரடுக்கு பஸ் நிலையம்
அதைத்தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.94 கோடியில் 10 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்று வரும் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணியையும் அமைச்சர்கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது அவர், அதிகாரிகளிடம் பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் பற்றியும், செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு குறுக்கே புதிதாக அமைக்கப்படும் பாலப்பணிகள் மற்றும் திருமணிமுத்தாறு சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதாதேவி, மாநகர பொறியாளர் ரவி, மாநகர் நல அலுவலர் யோகானந் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான 23.59 ஏக்கர் நிலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு அமைச்சர் கே.என். நேருவால் ஒப்படைக்கப்பட்டது.
ஏற்காட்டில் ஆலோசனை
ஏற்காடு சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஏற்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசும் போது, ஏற்காட்டிற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களை அதிகளவில் கவரும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் இந்த கூட்டத்தில் சாலையோர கடைகளை வரன்முறைபடுத்துவது தொடர்பாகவும், ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா உள்ளிட்ட இடங்களை மேம்படுத்துதல் குறித்தும், ஏரிகளின் கழிவுநீர் வெளியேற்றம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டு குடிநீர் திட்டப்பணிகள்
இதையடுத்து இளம்பிள்ளை, கல்பாரப்பட்டியில் ரூ.6 கோடியே 54 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளையும் அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் போது உயிரிழந்த 3 முன்களப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செங்கோடன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story