மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 579 பேர் மனு கொடுத்தனர


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்  579 பேர் மனு கொடுத்தனர
x
தினத்தந்தி 26 April 2022 2:13 AM IST (Updated: 26 April 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 579 பேர் மனு கொடுத்தனர்

நாகர்கோவில், 
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 579 பேர் மனு கொடுத்தனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
குமரி மாவட்ட பா.ஜனதா செயற்குழு உறுப்பினர் வேணு தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன் உள்பட கட்சி நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வீரநாராயணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறார். மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் அவமரியாதையுடன் நடந்து கொள்கிறார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்து, போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மீன் தொழிலாளர் சங்கத்தினர்
குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் பொதுச் செயலாளர் அந்தோணி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ராஜாக்கமங்கலம்துறை கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள ஒரு கோவிலின் அருகே, கடந்த 2014-ம் ஆண்டு மீனவர்கள் பயன்படும் வகையில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதில் மீனவர்கள் நெத்திலியை கருவாடக்கவும், வலை பின்னுவதற்கும் பயன்படுத்தி வந்தனர். இப்படி மீனவர்கள் பயன்படுத்தி வந்த அந்த காங்கிரீட் தளத்தை தனி நபர்கள் சிலர் இடித்து சேதப்படுத்தி உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த காங்கிரீட் தளத்தை புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
579 பேர் மனு
இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 579 போ் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அவற்றை பெற்று கொண்ட கலெக்டர் அரவிந்த், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். 
கூட்டத்தில் நெகிழி கழிவுகள் இல்லாத எதிர்காலம் என்ற தலைப்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அரவிந்த் பரிசு தொகை வழங்கி பாராட்டினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி, உதவி மேலாளர் நாகராஜன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மனு அளிக்க வந்த அனைவரும், போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story