வெள்ளோடு அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு


வெள்ளோடு அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 April 2022 2:16 AM IST (Updated: 26 April 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளோடு அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

வெள்ளோடு அருகே மயான ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
மயானம் ஆக்கிரமிப்பு
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
வெள்ளோடு அருகே உள்ள வேலாங்காட்டூர்வலசு, புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-
வேலாங்காட்டுவலசு, புதூர் பகுதியில் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வருகிறோம். 1½ ஏக்கர் பரப்பளவிலான இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, 30 சென்ட் மட்டுமே மயானம் என்றும், மீதமுள்ளவை தங்களுக்கு சொந்தமானவை என்றும் கூறி வருகிறார்கள். எனவே ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு, நாங்கள் தொடர்ந்து மயானத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
வேலை நிறுத்தம்
ஈரோடு மாவட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் நலச்சங்க தலைவர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஒப்பந்தம் மற்றும் வளர்ப்பு தொகை அடிப்படையில் விவசாய நிலங்களில் கொட்டகை அமைத்து, விவசாய உபதொழிலாக கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் உதவியுடன், கோழி வளர்க்கிறோம். தற்போது தேங்காய் மஞ்சு, கரி மூட்டை, பண்ணை வேலையாட்கள் கூலி உயர்ந்துவிட்டது. தற்போதும், குறைந்த பட்ச வளர்ப்பு தொகை, அடுக்கு விகிதத்தில் தொகை தர வேண்டும் என நிர்பந்திக்கின்றனர்.
கறிக்கோழியை வளர்ந்து கொடுப்பதால், தற்போது விவசாயிகளுக்கு லாபம் இல்லாத நிலை, பிரச்சினைகள், கோழி வளர்ப்பு நிறுவனங்களின் நிர்பந்தம் குறித்து, கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுமத்துக்கு கடிதம் கொடுத்தோம். கடந்த, 19-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என, குழும பொருளாளர் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இதுபோன்ற பேச்சுவார்த்தையில் நாங்கள் தலையிட முடியாது என்றும், தனித்தனியாக நிறுவனங்களுடன் பேசி கொள்ளுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர்.
தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்தும், பேச்சுவார்த்தை மூலம் உரிய தீர்வு காணக்கோரியும் வருகிற 29-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம், இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
மருத்துவ உதவி
பவானி அத்தாணி பகுதியை சேர்ந்த தங்கம்மாள் என்கிற கண்ணம்மாள் (வயது 65) என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எனக்கு குணசேகரன் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி சத்தியமங்கலத்தில் வசிக்கிறார். மகனுக்கு திருமணமாகி, பெங்களூருவில் வசிக்கிறார். கணவர் இறந்த நிலையில், தனது பெயரில் உள்ள நிலத்தை மகன் பெயருக்கு தானக்கிரயம் எழுதி வைத்தேன். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக எனது மகன் எனக்கு பணம் தருவதில்லை. மேலும் மருத்துவ உதவிக்கும் அழைத்துச்செல்வது இல்லை.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த எனது மகன், என்னை தாக்கி, உணவு கொடுக்காமல் ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டார். பின்னர் இதுபற்றி கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு வழங்கிய நிலையில், தனக்கு மகன் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், மருத்துவ உதவி உள்ளிட்ட தேவைகளை செய்து கொடுக்கவேண்டும் என்றும் ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். 
ஆனால் இதுவரை எனது மகன் எனக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. எனவே இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தி, நான் எனது மகனுக்கு தான கிரயமாக வழங்கிய நிலத்தை மீண்டும் எனக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
கூடுதல் விலை
அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையம் பகுதியை சேர்ந்த குபேரசம்பத் என்பவர் கொடுத்திருந்த மனுவில் ‘ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் எம்.ஆர்.பி.யில் பதிவு செய்துள்ள விலையைவிட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை வசூலிக்கின்றனர்.
டாஸ்மாக் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் செய்யும் கூடுதல் வசூலால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாகம் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
246 மனுக்கள்
இதேபோல் மொத்தம் 246 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 4 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, உதவி ஆணையாளர் (கலால்) ஜெயராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
சொத்து
பவானி பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்திருந்த மனுவில் 'பவானி வரதநல்லூரில் கருப்பணன் என்பவரின் பெயரில் 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் இறந்து விட்ட நிலையில் வாரிசுகளான 25 பேர் சொத்துக்களை பிரித்து கொள்வது தொடர்பான பணிகளை அனைவரின் சார்பிலும் ஒருவர் செய்து வந்தார். இதனிடையே அவர், நிலத்திற்கான ஆவணங்களை பெறுவதாக கூறி சக பங்குதாரர்களை பத்திரபதிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் போலியாக ஆவணங்களை தயாரித்து 1¾ ஏக்கர் நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த நிலத்தின் விலை பல கோடி ரூபாய் பெறும். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story