சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரியங்க் கார்கே தன்னிடம் இருக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும்; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரியங்க் கார்கே தன்னிடம் இருக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
யாரையும் பாதுகாக்கவில்லை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சப்-இன்ஸ்பெக்டர் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் யாரையும் அரசு பாதுகாக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இந்த முறைகேடு சம்பந்தமாக பிரியங்க் கார்கே எம்.எல்.ஏ. ஒரு ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு இருந்தார்.
நியாயமான நபராக இருந்தால்...
அந்த ஆடியோ விவகாரம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான முறைகேடு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி. போலீசார், பிரியங்க் கார்கேவுக்கு நோட்டீசு அனுப்பி வைத்திருந்தார்கள். ஒரு முறைகேடு பற்றி குற்றச்சாட்டு கூறி வரும் பிரியங்க் கார்கே, தன்னிடம் இருக்கும் ஆதாரங்கள், ஆவணங்களை போலிசாரிடம் வழங்க வேண்டும். போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருப்பதையே பெரிதுப்படுத்துவது சரியல்ல.
நியாயமான நபராக இருந்தால், பிரியங்க் கார்கே விசாரணைக்கு ஆஜராகி போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை நேர்மையான முறையில் எழுதியவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தான் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.
Related Tags :
Next Story