பொது இடங்களில் முககவசம் கட்டாயம்; கர்நாடக அரசு உத்தரவு..!!!
பொது இடங்களில் முககவம் அணிவது கட்டாயம் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பசவராஜ் பொம்மை ஆலோசனை
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனா 4-வது அலை இந்தியாவில் இன்னும் 3 அல்லது 4 வாரங்களுக்குள் தொடங்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கவும், மாநிலத்தில் கொரோனா 4-வது அலை உருவாவதை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
4-வது அலையை தடுக்க...
அப்போது 4-வது அலையை தடுக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை கட்டாயப்படுத்துவது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மேலும் மாநிலத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுப்பது, 60 வயது மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
முகக்கவசம் அணிவது கட்டாயம்
கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை உருவாகாமல் தடுக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பொது இடங்களான ரெயில், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
இதுதவிர உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யவில்லை. முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
பெங்களூருவில் 1.9 சதவீதம் பாதிப்பு
இதுதொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசு சார்பில் வெளியிடப்படும். தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை தீவிரமாக கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 1.9 சதவீதமாக இருக்கிறது.
மேலும் ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அந்த நாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களை விமான நிலையத்தில் வைத்தே தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் எங்கு தங்கி இருக்கிறார்கள், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்கள், பெங்களூருவை விட்டு சென்று விட்டார்களா? உள்ளிட்டவை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும்.
முதியவர்களுக்கு இலவச தடுப்பூசி
உலக சுகாதார நிறுவனம் கூட கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தான், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணிகளும் மாநிலத்தில் தீவிரப்படுத்தப்படும். மாநிலத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். அதுபோல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
4-வது அலை தீவிரமாகும் வரை காத்திருக்காமல் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசியை போட வேண்டும். மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் வைத்து கொண்டு அரசு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறது. இதனை அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
மீண்டும் ஆலோசித்து முடிவு
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுப்பது குறித்து வருகிற 27-ந் தேதி(நாளை) அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது அவர் வழங்கும் ஆலோசனைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதனால் 27-ந் தேதிக்கு பின்பு மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அப்போது, கொரோனா பரவலை தடுப்பது குறித்தும், புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிப்பது குறித்தும் விரிவாக ஆலோசித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு?
கர்நாடகத்தில் ஒமைக்ரான் புதிய வகை கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மந்திரி சுதாகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், கர்நாடகத்தில் ஒமைக்ரான் பி.ஏ.-2 வகையான வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சிலரிடம் இருந்து ரத்த மாதிரி, சளி உள்ளிட்டவை பெறப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கை வந்த பிறகு தான்புதிய வகை கொரோனா கர்நாடகத்திலும் பரவி இருக்கிறதா? என்பது தெரியவரும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ஆய்வக அறிக்கை அரசுக்கு கிடைக்க உள்ளது, என்றார்.
Related Tags :
Next Story