தினத்தந்தி புகாா்பெட்டி


தினத்தந்தி புகாா்பெட்டி
x
தினத்தந்தி 26 April 2022 2:43 AM IST (Updated: 26 April 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி



குப்பையால் துர்நாற்றம் 

கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் மொடச்சூரில் ஓரிடத்தில் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. மேலும் குப்பைகள் மழையில் நனைந்து உள்ளதால் அதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்றவும், அந்த இடத்தை சுத்தமாக வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.


வாய்க்கால்கரையா?... மதுக்கூடமா?

  ஈரோடு சாஸ்திரிநகர் வாய்க்கால் மேட்டில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் வரை நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் கரையோரமாக சாலை செல்கிறது. அந்த இடத்தில் எப்போது பார்த்தாலும் மதுப்பிரியர்கள் அமர்ந்து, மது அருந்தியபடி இருக்கிறார்கள். இதனால் அந்த வழியாக பெண்கள் நடந்து செல்வதற்கே அச்சப்படுகிறார்கள். எனவே சாலையோரமாக அமர்ந்து மது அருந்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராம், சாஸ்திரிநகர்.
  
குண்டும், குழியுமான சாலை

  கொடுமுடி அருகே பெரிய செம்மாண்டம்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள தார்ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல இயலாத நிலை உள்ளது. உடனே தார்சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், பெரிய செம்மாண்டம்பாளையம்.
  
ஆபத்தான குழி

  ஈரோடு மோசிக்கீரனார் வீதி 5-ல் 4 ரோடு சாலை சந்திக்கும் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து குழியை மூடாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் அவதிப்படுகின்றனர். குழியில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த குழியை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  என்.அன்புதம்பி, ஈரோடு

  
வீணாகும் குடிநீர்

  ஈரோடு சம்பத் நகர் அருணாசலம் வீதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த ேராடு சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்தப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகின்றது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மணிகண்டன், ஈரோடு.
  
வாகன ஓட்டிகள் அவதி

  அந்தியூர் கெட்டி விநாயகர் கோவில் அருகே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டு ஜல்லி கற்கள் பெயர்க்கப்பட்டது. ஆனால் பணி முடிந்து ரோட்டை அப்படியே சீரமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், அந்தியூர்.

Next Story