7 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியாக நீடிக்கிறது
7 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியாக நீடிக்கிறது. இதனால் பெங்களூருவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரு:
கே.ஆர்.எஸ். அணை
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கிருஷ்ணராஜா சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த கே.ஆர்.எஸ். அணை கர்நாடக, தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை எட்டும். அதன்பிறகு உபரி நீர் காவிரி வழியாக தமிழகத்துக்கு திறந்து விடப்படும்.
பெங்களூரு நகரின் குடிநீர் ஆதாரமாகவும் கே.ஆர்.எஸ். அணை விளங்குகிறது. கே.ஆர்.எஸ். அணையின் உயரம் 124.80 அடி ஆகும். கடந்த ஆண்டு (2021) தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால், தென்மேற்கு பருவமழையின்போது அணை நிரம்பவில்லை.
அக்டோபர் மாதத்தில்...
அதன்பிறகு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பல ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் கே.ஆர்.எஸ். அணை தனது முழுகொள்ளளவை எட்டி நிரம்பியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. மேலும் பாசனத்துக்கும், பெங்களூரு நகருக்கு குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்ததாலும் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டியதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக நீடிக்கிறது.
100 அடியாக நீடிக்கிறது
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 100.66 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது 49.54 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி ஆகும்) தண்ணீர் இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 594 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,977 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ். அணையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் நீர்மட்டம் 100 அடியாக நீடிக்கிறது. கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதத்தில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 94.05 அடியாக இருந்தது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100 அடியாக நீடித்து வருவதால் பெங்களூரு, மண்டியா, ராமநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என காவிரி நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாசனத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story