குடும்பத்தகராறில் மனைவி கொலை; கணவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சென்னை கிண்டி மடுவங்கரை பகுதியில் குடும்பத்தகராறில் மனைவி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை,
ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 32). இவரது மனைவி உஷாராணி. இவர்களுக்கு, 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.இவர்கள், சென்னை கிண்டி மடுவங்கரை பகுதியில் வசித்து வந்தனர். பிரசாத், அவ்வப்போது வீட்டில் இருந்து பணத்தை எடுத்து, குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.கடந்த 2020-ம் ஆண்டு மனைவிக்கு தெரியாமல் பிரசாத் மோட்டார் சைக்கிளை விற்றுள்ளார்.
இதுகுறித்து உஷாராணி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரசாத், உஷாராணியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிண்டி போலீசார், பிரசாத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார்.வழக்கை விசாரித்த நீதிபதி, பிரசாத் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story