அடுக்குமாடி குடியிருப்பு முன்பு தூங்கியபோது எழுப்பியதால் காவலாளியை அடித்து கொன்ற போதை கும்பல்
சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு தூங்கிய போதை ஆசாமிகளை காவலாளி எழுப்பியதால் ஆத்திரத்தில் அடித்து கொன்றனர்.
சென்னை,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் பூமாலை (வயது 52). இவர், சென்னை அசோக் நகர் 10-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், தலையில் ரத்த காயத்துடன் நேற்று முன்தினம் காலையில் மயங்கி கிடந்தார்.
நடைபயிற்சி செல்வதற்காக சென்ற குடியிருப்பின் செயலாளர் பாலாஜி, அவரை மீட்டு கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி பூமாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் குடியிருப்பின் வாசலில் மதுபோதையில் உறங்கிய 4 பேரை பூமாலை எழுப்பியபோது, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், அவரது தலையில் கட்டையால் தாக்கியது பதிவாகி இருந்தது. அதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி, மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20), அசோக்நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த வழக்கில் கானா கார்த்திக், சந்தோஷ்குமார் ஆகிய 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story