சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்
தாம்பரம் சானடோரியத்தில் நடந்த விழாவில், சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகளை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2019-20-ம் ஆண்டுக்கான சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மெப்ஸ் மேம்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் வரவேற்றார்.விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். இதில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை மந்திரி அனுபிரியாசிங் படேல், தமிழக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுகளை வழங்கிய பிறகு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-
தொழில் துறை உற்பத்திக்கான கட்டமைப்பை சிறந்த அளவில் பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள், தோல் பொருட்கள், மென்பொருள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் நாட்டுக்கே முன்னோடியாக தமிழகம் தொடர்ந்து வருகிறது. வலுவான கட்டமைப்பு மற்றும் 4 சர்வதேச விமான நிலையங்கள், 3 மிகப்பெரும் கடல் துறைமுகங்கள், பல்வேறு சிறு கடல் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் கூடிய சிறந்த போக்குவரத்து வசதிகளுடன் நாட்டில் 3-வது பெரும் ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி, ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிப்பதில் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் முன்னோடியாக திகழ்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் நேரடியாக 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story