குடியிருப்பு வீடுகளை அகற்ற வந்த நோட்டீஸ் திரும்ப பெற கோரி ஆர்.வீ.ரஞ்சித்குமார் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
குடியிருப்பு வீடுகளை அகற்ற வந்த நோட்டீஸ் திரும்ப பெற கோரி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு வழங்கினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாநகராட்சி 27-வது வார்டில் அடங்கிய நத்தம்பேட்டை ஏரி பின்புறம் வையாவூர் சாலை அன்னை இந்திரா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது வரை அரசினால் அடிப்படை வசதிகள் பெற்று அரசுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி குடிநீர் வரி உள்ளிட்டவைகளை முறையாக செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற கோரி பொதுப்பணித்துறை கடிதம் வழங்கி உள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், மற்றும் 27-வது வார்டு கவுன்சிலர் ஷாலினி வேலு ஆகியோரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் நேற்று 27-வது வார்டுக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசிக்கும் குடியிருப்பு வீடுகளை அகற்ற பொதுபணித்துறை மூலம் வந்த நோட்டீஸ் திரும்ப பெறவேண்டும் என, அன்னை இந்திரா நகர் பகுதி மக்களுடன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார், கவுன்சிலர் ஷாலினி வேலு ஆகியோர், காஞ்சீபுரம் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சிவருத்ரையாவிடம் கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்று கொண்ட அவர் ஆவணம் செய்வதாக உறுதியளித்தார்.
Related Tags :
Next Story