கிணற்றுக்குள் தவித்த நல்லபாம்பு மீட்பு


கிணற்றுக்குள் தவித்த நல்லபாம்பு மீட்பு
x
தினத்தந்தி 26 April 2022 6:29 PM IST (Updated: 26 April 2022 6:29 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கிணற்றுக்குள் தவித்த நல்ல பாம்பு மீட்கப்பட்டது.

வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு, அதே பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்குள்ள 40 அடி ஆழ கிணற்றில் 15 அடி வரை தண்ணீர் இருக்கிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு, அந்த கிணற்றுக்குள் பாம்பு ஒன்று தவறி விழுந்து விட்டது. அது வெளியே வர முடியாமல் கிணற்றுக்குள்ளேயே படம் எடுத்தபடி சீறி கொண்டே இருந்தது.

இந்தநிலையில் அந்த வழியாக சென்ற விவசாயி ஒருவர் கிணற்றை எட்டி பார்த்தார். அப்போது பாம்பு ஒன்று மேல வர முடியாமல் தவித்து கொண்டிருந்ததை கண்டார். இதுகுறித்து அவர், வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு படையினர், நைலான் கயிற்றால் ஆன வலை மூலம் பாம்பை உயிருடன் பிடித்து மேலே கொண்டு வந்தனர். பிடிபட்ட பாம்பு 8 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஆகும். பின்னர் அந்த பாம்பு, அய்யலூர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

Next Story