மும்பை, தானேயில் திடீர் மின் தடை- பொதுமக்கள் கடும் அவதி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 April 2022 2:48 PM GMT (Updated: 26 April 2022 2:48 PM GMT)

மும்பை, தானேயில் நேற்று திடீரென ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மும்பை, 
மும்பை, தானேயில்  திடீரென ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
 திடீர் மின் தடை
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டியத்தில் 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே இதை ஈடுகட்ட மாநிலத்தில் பல பகுதிகளில் மின்வெட்டு அமலில் உள்ளது. எனினும் மும்பையில் பொது மக்களுக்கு தடையின்றி மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் மும்பையில் திடீரென மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. மும்பையில் தாதர், முல்லுண்டு, பாண்டுப் உள்ளிட்ட பகுதிகளில் மின்சப்ளை தடைப்பட்டது. 
இதேபோல நவிமும்பை, தானே, டோம்விலி, அம்பர்நாத், கல்யாண், வசாய் போன்ற பகுதிகளிலும் மின் தடை ஏற்பட்டது.
மின் தடத்தில் பிரச்சினை
இந்தநிலையில் கல்யாண் அருகே உள்ள பாட்கா துணை மின் நிலையத்தில் காலை 10 மணியளவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் சப்ளை தடைப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மாநில மின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வா-பட்காவில் 400 கிலோவாட் மின்தடத்தில் பிரச்சினை காரணமாக மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. மின் தடத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் சீராகும்" என்றார்.
செம்பூர், மான்கூர்டு
இதற்கிடையே மின் தடை குறித்து டாடா பவர் நிறுவனம் கூறுகையில், மும்பைக்கு மின் வினியோகம் செய்யும் மாநில மின் நிறுவன தடத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திடீர் மின் தடை ஏற்பட்டதாக கூறியது.
இதேபோல தாராவி டாடா மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் செம்பூர், மான்கூர்டு, கோவண்டி, பாந்திரா, சாந்தாகுருஸ் உள்ளிட்ட பகுதி நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டதாக அதானி நிறுவனம் கூறியது. 
தாதர், மாகிம், சிவாஜி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் 40 நிமிடங்களுக்கு மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக பெஸ்ட் நிறுவனம் தெரிவித்தது.
 பொதுமக்கள் அவதி
முன்னதாக மின் வினியோகத்தை சீராக்க மாநில மின் வினியோக நிறுவனம் முழுவீச்சில் ஈடுபட்டது. இதில் சுமார் 1½ நேர போராட்டத்திற்கு பிறகு தான் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் சீராக வினியோகிக்கப்பட்டது. மும்பையில் சுமார் 1 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
முன் அறிவிப்பு இன்றி திடீரென மின் வினியோகம் தடைப்பட்டதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக நகரில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொது மக்கள் மின்சாரம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மும்பையில் மின்வெட்டு ஏற்படுவது அரிதான ஒன்றாகும். நகரில் கடந்த 2020 அக்டோபர் 12-ந் தேதி 18 மணி நேரத்திற்கும், கடந்த பிப்ரவரி 27-ந் தேதியும் மிகப்பெரிய அளவில் மின் தடை ஏற்பட்டு இருந்தது. அப்போது மின் தடையால் மின்சார ரெயில் சேவை கூட பாதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story