திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 5½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 5½ மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 April 2022 8:38 PM IST (Updated: 26 April 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 5½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதை வளைவில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 5½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திரும்ப முடியாமல்...
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும் அங்கிருந்து தமிழகத்துக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் இரவு நேரத்தில் சாலையை கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கன்டெய்னர் லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக  சென்று கொண்டிருந்தது. அப்போது 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது குறுகிய வளைவு என்பதால் திரும்ப முடியாமல் நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த வழியாக கார், பஸ், லாரி, சரக்கு வாகனம் உள்பட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து  பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. அனைத்து வாகனங்களும் அங்கிருந்து சென்றன. திம்பம் மலைப்பாதை வளைவில் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் சுமார் 5½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டனர். காலை நேரத்தில் உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Next Story