பொக்லைன் எந்திரம் தலைகுப்புற கவிழ்ந்து ஆபரேட்டர் பலி


பொக்லைன் எந்திரம் தலைகுப்புற கவிழ்ந்து ஆபரேட்டர் பலி
x
தினத்தந்தி 26 April 2022 8:56 PM IST (Updated: 26 April 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே லாரி மோதியதில் பொக்லைன் எந்திரம் தலைகுப்புற கவிழ்ந்து ஆபரேட்டர் பலியானார்.

உப்புக்கோட்டை:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 35). பொக்லைன் எந்திர ஆபரேட்டரான இவர், சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வேலை தொடர்பாக ராமர் பொக்லைன் எந்திரத்தில் கம்பம் சென்றார். பின்னர் அங்கிருந்து ஜக்கம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். 
வீரபாண்டி அருகே கோட்டூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் அவர் வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று பொக்லைன் எந்திரம் மீது பயங்கரமாக மோதியது. இதில் பொக்லைன் எந்திரம் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது இடிபாடுகளில் சிக்கி ராமர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராமரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் பலியானார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் நடத்திய விசாரணையில், பொக்லைன் எந்திரம் மீது மோதிய லாரியை கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த அணில்குமார் (36) ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story