கோலியனூரான் வாய்க்கால் அருகில் ரெயில்வே துறையினர் மதில் சுவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பணி பாதியில் நிறுத்தம்


கோலியனூரான் வாய்க்கால் அருகில் ரெயில்வே துறையினர் மதில் சுவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பணி பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 April 2022 9:47 PM IST (Updated: 26 April 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

கோலியனூரான் வாய்க்கால் அருகில் ரெயில்வே துறையினர் மதில் சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது.


விழுப்புரம், 

விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனி பகுதியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடங்களை ரெயில்வே துறையினர் அளந்து அங்கு சுற்றிலும் கருங்கற்களால் ஆன மதில்சுவர் அமைக்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் நகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட வானக்கார குப்புசாமி தெரு அருகில் உள்ள கோலியனூரான் வாய்க்கால் அருகே மதில் சுவர் அமைக்கும் பணியை ரெயில்வே துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்காக மதில் சுவர் எழுப்புவதற்காக அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இப்பணியானது கோலியனூரான் வாய்க்காலுக்கு மிக அருகில் நடந்து வருகிறது.

பொதுமக்கள் போராட்டம்

இதையறிந்ததும் வானக்கார குப்புசாமி தெரு, கிருஷ்ணப்ப நாயக்கர் தெரு, கோலியனூரான் வாய்க்கால் தெரு, தாயுமானவர் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை அப்பணி நடந்து வரும் இடத்திற்கு திரண்டு வந்து திடீரென மதில் சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகராட்சி தலைவர் சக்கரை தமிழ்செல்வி, கமிஷனர் சுரேந்திரஷா மற்றும் ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாதை வசதி

அப்போது அவர்கள் கூறுகையில், கோலியனூரான் வாய்க்காலுக்கு மிக அருகிலேயே மதில் சுவர் எழுப்பும் பணியை கைவிட வேண்டும். ஏனெனில் வாய்க்காலில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் அதனை தூர்வார பொக்லைன் எந்திரம் வருவதற்கு பாதை இல்லாத அளவிற்கு மதில் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. 

குறிப்பாக மழைக்காலங்களில் இங்குள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள எங்கள் குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகுந்துவிடும் நிலைமை ஏற்படும். 

எனவே கோலியனூரான் வாய்க்காலில் இருந்து 10 அடி இடைவெளி விட்டு பொக்லைன் எந்திரம் வருவதற்கு வசதியாக பாதை ஏற்படுத்திவிட்டு மதில் சுவர் அமைக்குமாறு முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த ரெயில்வே அதிகாரிகள், இதுபற்றி உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பேரில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த போராட்டத்தினால் மதில் சுவர் அமைக்கும் பணி தற்காலிகமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

Next Story