நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு


நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 April 2022 9:50 PM IST (Updated: 26 April 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிப்பாளையம்:
மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
நாகையை அடுத்த கோகூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவர் தனது மனைவி விஜயலட்சுமி, உறவினர்கள் ஜெயா, அய்யப்பன் உள்பட 6 பேருடன் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். 
அங்கு வந்த அவர்கள், திடீரென தாங்கள் வைத்திருந்த 2 கேன்களை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். 
தடுத்து நிறுத்தினர்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதைப்பார்த்து அங்கு ஓடி வந்தனர். பின்னர் தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். 
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அய்யப்பன் கூறியதாவது:-
எனது சித்தப்பா ராஜேந்திரன், சித்தி விஜயலட்சுமி. இவர்களது மகன் அம்பேத்கர். இவர், கீழ்வேளூர் அருகே கோகூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தற்காலிக உதவியாளராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 
 கலெக்டர் அலுவலகத்தில் மனு
தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் வேறு ஒருவர் உதவியாளர்  பணிக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்டதால் அம்பேத்கர் விவசாய வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கோகூர் பகுதியில் குவாரி அமைத்து அனுமதியின்றி மணல் அள்ளி வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கடந்த 4-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனு மீது  நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் மீண்டும் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குவாரியை காண்பித்ததால் தாக்குதல்
இதை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் கோகூர் கிராமத்திற்கு வந்து எனது சகோதரர் அம்பேத்கர் ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலகத்தில தற்காலிக பணியாற்றியதால் அவரை அழைத்துக் கொண்டு மணல் குவாரி அமைந்துள்ள இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதன்பின்னர் அதிகாரிகள் சென்றவுடன் மணல் குவாரி வைத்துள்ளவர், தனது அடியாட்களுடன் அம்பேத்கர் வீட்டிற்கு சென்று மணல் குவாரி இருக்கும் இடத்தை அதிகாரிகளிடம் ஏன் காண்பித்தாய்? என்று கேட்டு அவரை தாக்கினர். 
மேலும் கொலை மிரட்டலும் விடுத்து சென்றனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த அம்பேத்கர் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
பரபரப்பு
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றோம். ஆனால் போலீசார் புகாரை பெற மறுத்து விட்டனர். எனது சகோதரர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தோம். 
இவ்வாறு அவர் கூறினார். 
இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story