நேரடி நெல் கொள்முதல் அதிகாரியை கண்டித்து வளத்தியில் விவசாயிகள் சாலை மறியல்
நேரடி நெல் கொள்முதல் அதிகாரியை கண்டித்து வளத்தியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே வளத்தியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் முதல் இயங்கி வருகிறது. நேற்று விவசாயிகள் நெல்மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
அப்போது, விற்பனை நிலையத்தின் மேற்பார்வையாளர் ஒரு மூட்டைக்கு ரூ.10-ம், கிலோ ஒன்றுக்கு ரூ.1-ம் கமிஷன் தரவேண்டும் என்று விவசாயிகளிடம் கேட்டதாக தெரிகிறது. இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர்.
அப்போது, நீங்கள் பணம் கொடுத்தால் தான், வங்கி மூலம் பணம்பட்டுவாடா செய்வோம் என்று அந்த மேற்பார்வையாளர் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மேல்மலையனூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் விற்பனை செய்த நெல்லுக்கு பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தவுடன் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story