வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்த  பக்தர்கள்
x
தினத்தந்தி 26 April 2022 10:15 PM IST (Updated: 26 April 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் வந்து குவிந்தனர்.

சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ முத்துக்குமாரசாமி, அங்காரகன்(செவ்வாய்), தன்வந்திரி ஆகியவை தனி சன்னதிகளோடு இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.   இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.
இதேபோல ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையன்று தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, செட்டிநாடு, கோட்டையூர், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள நகரத்தார்கள் பாதயாத்திரையாக வந்து வைத்தியநாதர், தையல்நாயகி உள்ளிட்ட சுவாமிகளை வழிபடுவது வழக்கம். 
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வர அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் இந்த ஆண்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.
சீர்வரிசை பொருட்கள்
அதன்படி நகரத்தார்கள் கடந்த சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை அன்று தங்களது ஊர்களில் இருந்து புறப்பட்டு தையல்நாயகி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை மாட்டுவண்டிகளில் எடுத்துக்கொண்டு கையில் வேப்பங்குச்சி அதில் வேப்பஇலை மற்றும் பூவை சுற்றி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக நடந்து வந்தனர்.  நேற்று பாதயாத்திரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கோவிலில் வந்து குவிந்தனர்.
அதனைத்தொடர்ந்து விடியற்காலை புனித நீராடி நான்கு வீதிகளையும் வலம் வந்து வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்துவிட்டு வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தங்கள் கையில் கொண்டு வந்த வேப்பங்குச்சிகளை கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தினர். 
சிறப்பு பஸ்கள்
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், செயல் அலுவலர் மருதுபாண்டியன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வாகனங்கள் அதிகளவு வந்ததால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. 
சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story