மாநகராட்சி அலட்சியத்தால் வீதியில் தேங்கும் குப்பைகள்


மாநகராட்சி அலட்சியத்தால் வீதியில் தேங்கும் குப்பைகள்
x
தினத்தந்தி 26 April 2022 10:56 PM IST (Updated: 26 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி அலட்சியத்தால் வீதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

மாநகராட்சி அலட்சியத்தால் வீதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
 குப்பை
சுத்தம் சோறு போடும் என்பார்கள். இது வீட்டிற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கே பொருந்தும். இதனால் தான் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுமைக்கும் சுகாதாரத்தை பேணி காப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கையாள்வதில் திண்டாடி வருகிறது. திருப்பூர் ஸ்மார்ட் சிட்டியாக மாறியுள்ள நிலையில் பெயரில் இருக்கும் ஸ்மார்ட் வீதியில் இருப்பதில்லை. காரணம் மாநகரின் பல வீதிகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. 
தற்போது மாநகராட்சி பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் குப்பையில்லா மாநகராக மாற்றும் வகையில் நுண் உர செயலாக்க மையத்திற்கு குப்பை சேகரிக்கும் இலக்கானது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது வரவேற்ககூடிய விஷயம் தான். ஆனால் மாநகர் முழுவதும் குப்பைகள் சரியான முறையில் சேகரிக்கப்படுகின்றதா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. 
நோய் அபாயம்
திருப்பூரில் உள்ள பிரதான ரோட்டோரங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு ஓரளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான வீதிகளில் குப்பைகள் சீரான இடைவெளியில் அப்புறப்படுத்தப்படுவதில்லை. குப்பை தொட்டியும் தேவையான அளவிற்கு வீதிகளில் வைக்கப்படுவதில்லை. இதனால் சில இடங்களில் குப்பை கொட்டுவதற்கு இடமின்றி வீதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதேபோல் சில இடங்களில் ஓட்டை, உடைசல் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தொட்டியில் போடப்படும் குப்பைகள் ரோட்டில் சிதறி கிடக்கின்றன. திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு அருகே ஜெய் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குப்பைகள் சீரான இடைவெளியில் அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால் இங்குள்ள பல வீதிகளில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. ஜெய் நகர் ரேஷன் கடை வீதியில் ஒரு தனியார் பள்ளி அருகே குப்பைகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. இதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கப்படுவதால் பலதரப்பட்ட குப்பையிலிருந்து வரும் நச்சுப்புகையால் மாணவ, மாணவிகள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி அலட்சியம் 
இதேபோல் இங்கு அத்திமரத்துப்புதூர், பள்ளக்காட்டு புதூர், காசிபாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. காசிபாளையம் ரோட்டில் மீன் மற்றும் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் இங்கு கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதேபோல் ஜெய் நகரில் உள்ள பல வீதிகளில் குப்பை சேகரிக்க வருபவர்கள் அனைத்து குப்பைகளையும் அப்புறப்படுத்தாமல் பாதியில் விட்டு செல்வதாகவும், இது குறித்து கேட்டால் மிகவும் அலட்சியமாக பதிலளிப்பதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று போய் நாளை வா என்ற கதை போல நீண்ட இடைவெளிக்குப்பின் குப்பை சேகரிக்க வருகின்றனர். இதனால் வீதியில் குப்பை தேங்கும், அல்லது வீட்டில் குப்பை தேங்கும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகளை கையாள்வதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு வகையில் உண்மையாக இருந்தாலும், ஓட்டல்கள், பெரிய நிறுவனங்களில் தினமும் அதிக அளவில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்த தனி கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் வீதியில் குப்பைகள் தேங்குகிறது என்றால் அது மாநகராட்சியின் அலட்சியத்தை தான் காட்டுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே குப்பை மேலாண்மையில் மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை உள்ள ஓட்டைகளை அடைக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வருமா?.

Next Story