தர்பூசணி விற்பனை குறைந்தது
உடுமலை பகுதியில் தொடர் மழை காரணமாக தர்பூசணி விற்பனை குறைந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தளி
உடுமலை பகுதியில் தொடர் மழை காரணமாக தர்பூசணி விற்பனை குறைந்தது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தர்பூசணி பழம்
இயற்கையை பருவநிலையும், சுற்றுச்சூழலும் பாதுகாப்பதுபோல கோடைகாலத்தில் உடலை காப்பது நீர்ச்சத்து மிகுந்த பழச்சாறும், பழவகைகளும். இன்னும் ஒரு சில நாட்களில் கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. அதன் தாக்குதலை சமாளிப்பதற்காக பொதுமக்கள் நீர்ச்சத்து, நார்சத்து, புரதச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் உதவியை நாடத் தொடங்கி உள்ளனர்.
வெப்பத்தின் தாக்குதலால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுத்து ஆரோக்கியத்தை காப்பதில் தர்பூசணிப்பழம் முதலிடம் வகிக்கிறது. மேலும் முலாம்பழம், எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு விதமான பல வகைகளும் நமக்கு உதவி புரிகின்றது. இதில் 90 சதவீத நீர் இருப்பை கொண்டுள்ள தர்பூசணிப்பழமே கோடைகால விருப்ப உணவாக உள்ளது. பூமியில் பாய்ச்சப்படுகின்ற தண்ணீரை சத்துக்களாக மாற்றி ஒட்டு மொத்தமாக நீர்இருப்பை தன்னகத்தே சேமித்து வைத்து மக்களுக்கு அளிப்பதில் அதன் பங்கு மகத்தானது.
விற்பனை குறைவு
தர்பூசணியில் தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், இரும்பு சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதனால் இதயம், மூளை, சிறுநீரகம் வரையிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கோடை காலத்தை மையமாகக்கொண்டு தர்பூசணி விற்பனைக்கு வருகின்றன. இதனால் கோடைகால சாகுபடியில் முதலிடம் வகிப்பது தர்பூசணி தான்.
அந்த வகையில் உடுமலை சுற்றுப்புறப்பகுதியில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டது. அதன் மூலமாக விவசாயிகளும் ஓரளவிற்கு வருமானம் ஈட்டி வந்தனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து உள்ளதுடன் ஓரளவிற்கு சில்லென்ற சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மீதான பொதுமக்களின் நுகர்வு குறைந்து வருகிறது. அந்த வகையில் தர்பூசணி பழத்தின் விற்பனையும் உடுமலை பகுதியில் குறைந்து உள்ளது.
வியாபாரிகள் ஏமாற்றம்
இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து உடுமலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தர்பூசணியும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடைகளில் குறைந்த அளவு பழங்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடர் மழையின் காரணமாக எளிதில் அழுகக்கூடிய தர்பூசணியை இறக்குமதி செய்து இருப்பு வைக்க முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கமும் குறைந்து உள்ளதால் தர்பூசணி வியாபாரம் பெரிய அளவில் நடைபெறுவதில்லை. இதனால் தர்பூசணி சீசனை நம்பி சில்லறை மற்றும் மொத்த கடைகள் அமைத்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story