ஆதிதிராவிட குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா
முத்தூர் அருகே 104 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டு மனை பட்டா நிலம் அளவீடு செய்து தனித்தனியாக பிரித்து வழங்கினார்கள்.
முத்தூர்
முத்தூர் அருகே 104 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டு மனை பட்டா நிலம் அளவீடு செய்து தனித்தனியாக பிரித்து வழங்கினார்கள்.
ஆதிதிராவிட குடும்பத்தினர்கள்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்ன காங்கயம்பாளையம் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் 104 குடும்பங்களை சேர்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கடந்த ஆட்சியின் போது இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பட்டா வழங்கப்பட்ட சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 104 ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் நிலம் பிரித்து வழங்குவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த கிராமத்தில் பட்டா பெற்ற ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீ்ட்டுமனை பட்டா அடிப்படையில் உரிய இடத்தை அளவீடு செய்து பிரித்து வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், காங்கயம் தாலூகா அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தனர். ஆனால் ஓராண்டு காலமாக இப்பகுதி மக்களுக்கு பட்டா நிலம் பிரித்து வழங்கப்படவில்லை.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதனை தொடர்ந்து வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவேல் என்கிற ஏ.எஸ்.ராமலிங்கம் இப்பகுதி ஆதிதிராவிட மக்களுக்கு உடனடியாக பட்டா நிலம் பிரித்து வழங்க கோரி வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) காங்கயம் தாலூகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க கட்சி மற்றும் ஆதிதிராவிட மக்கள் குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் கடந்த வாரம் சின்ன காங்கயம்பாளையம் கிராமத்திற்கு நேரில் வந்து பட்டா நிலத்தை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கனிமொழி, வருவாய் ஆய்வாளர் கவுரி, நில அளவையர்கள் பிரேம்குமார், சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர்கள் வனிதா (மங்களப்பட்டி), மோகன் பிரபு (பூமாண்டன் வலசு) தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை சின்ன காங்கயம்பாளையம் கிராமத்தில் 104 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு பட்டா நிலம் உரிய அளவீடு செய்து தனித்தனியாக பிரித்து வழங்கினார்கள்.
Related Tags :
Next Story