காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்


காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 26 April 2022 11:44 PM IST (Updated: 26 April 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மர கட்டைகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரம் உள்ளிட்ட மரங்களை இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் கடத்துவதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனவர் முருகன், வனகாப்பாளர்கள் பூபதி, வனராஜ், சிவன், சுகந்தன், சபரி, பிரபு உள்ளிட்ட வனத்துறையினர் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள கொண்டம்மாகோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை வனத்துறையினர் நிறுத்தியபோது அதில் இருந்தவர்கள் இறங்கி அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

ரூ.50 லட்சம் செம்மர கட்டைகள்

 காரை சோதனை செய்ததில் சுமார் 4 அடி நீளம் கொண்ட 17 செம்மரக்கட்டைகள் இருந்தது. இதன் மதிப்பு மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து வனத்துறையினர் காரையும் அதிலிருந்த செம்மரக்கட்டைகளையும் குடியாத்தம் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். 
 

Next Story