வக்கீல் கமிஷனர்களை நியமித்தது ரத்து
வக்கீல் கமிஷனர்களை நியமித்தது ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
மதுரை கப்பலூர் 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி (டோல்கேட்) அமைந்துள்ளது. இதன் அருகில் ஒரு மாவு மில் செயல்படுகிறது. இந்த மாவு மில்லுக்கு நாள்தோறும் சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.
சுங்கச்சாவடி அருகில் உள்ள இந்த மாவு மில்லுக்கு வரும் அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்தி வரும் நிலை உள்ளது. எனவே இந்த மில்லுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று மாவு மில் நிர்வாகி மோகன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த 8-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, மனுதாரர் கோரிக்கை குறித்து ஆய்வு செய்வதற்கு 3 வக்கீல் கமிஷனர்களை நியமித்து உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே வக்கீல் கமிஷனர்கள் நியமித்து ஆய்வு செய்யும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஆகியோர் விசாரித்தனர்.
முடிவில், தனிநீதிபதி முன்பு நிலுவையில் உள்ள இந்த வழக்கின் உண்மைத்தன்மை என்ன? என்ற கேள்வியை எழுப்பி ஆராய இந்த கோர்ட்டு விரும்பவில்லை. ஆனால் இந்த வழக்கில் வக்கீல் கமிஷனர்கள் நியமித்து தனிநீதிபதி உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. எனவே வக்கீல் கமிஷனர்கள் நியமித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த வழக்கில் இன்று தனிநீதிபதி உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், வருகிற ஜூன் மாதம் வழக்கை அதே நீதிபதி முன்பு பட்டியல் இடுவதற்கு ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது, என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story