தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.16 லட்சம் பறித்த 3 பேர் கைது
காரைக்குடி அருகே தொழில் அதிபரை கடத்தி ரூ.16 லட்சம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி
காரைக்குடி அருகே தொழில் அதிபரை கடத்தி ரூ.16 லட்சம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல்
காரைக்குடி அருகே உள்ள கல்லல் செம்பனூர் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ்(வயது 57). இவர் தற்போது காரைக்குடி கழனிவாசல் பகுதியில் வசித்து வருகிறார். மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரை செல்போனில் தொடர்பு கொண்ட சிலர், வெங்கட்ராமபுரத்தில் உள்ள அவரது இடத்தை விலைக்கு அல்லது குத்தகைக்கு தரும்படி கேட்டுள்ளனர். இதையடுத்து அருள்ராஜ் வெங்கட்ராமபுரத்தில் உள்ள இடத்தை காண்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு காரில் வந்த 4 பேர் அருள்ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்தி சென்றனர்.
பின்னர் அருள்ராஜை செல்போன் மூலமாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவசர தேவை என்று பேசவைத்து ரூ.16 லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர். பின்அருள்ராஜ் ஏ.டி.எம். கார்டு மூலமாக ரூ.15 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் மோதிரம், சங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்தனர். இதையடுத்து அருள்ராஜை பைக்குடிப்பட்டி என்ற இடத்தில் அவரது மோட்டார் சைக்கிளுடன் விட்டுள்ளனர்.
விசாரணை
அப்போது அருள்ராஜ் தனது செல்போனை மட்டும் தருமாறு கேட்க கொள்ளைக்கும்பலை சேர்ந்தவர்கள் அவசரத்தில் அருள்ராஜ் செல்போனுக்கு பதிலாக தங்களது செல்போனை கொடுத்து விட்டனர். இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அருள்ராஜ் பணம் வாங்கி வரச்சொன்னதாக காரைக்குடியில் மெடிக்கல்ஷாப் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளைக்கும்பலை சேர்ந்த ஒருவன் பணம் வாங்கிச்சென்றபோது அங்கிருந்த கண்காணிப்புக்கேமராக்களில் அவனது படம் பதிவாகியிருந்தது. அதனைக்கொண்டும், அருள்ராஜிடம் சிக்கிய கொள்ளைக்கும்பலின் செல்போன் பதிவுகளை கொண்டும் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
3 பேர் கைது
விசாரணையில் கொள்ளை கும்பலின் செல்போன், மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டி சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து தேனியில் பதுங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த சருகுவலையபட்டி சேர்ந்த பாக்கியராஜ்(35), மலம்பட்டியைச் சேர்ந்த தென்னரசு(30), பாகனேரி அருகே உள்ள நெற்புகபட்டியை சேர்ந்த செல்லத்துரை(38) ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.8 லட்சத்து 30 ஆயிரம், 1¼ பவுன் நகைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டியே ்கடத்தல் மற்றும் பணம் பறிப்பு சம்பவத்திற்கு காரணம் என தெரிய வந்தது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story