4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் அதிகாரிகள நடத்திய சோதனையில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் அதிகாரிகள நடத்திய சோதனையில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி பறிமுதல்
நாட்டறம்பள்ளி தாலுகா திரியாலம் கிராமம் குறவர் வட்டம் பகுதியில் உள்ள வீடுகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையில் பறக்கும் படை தனிவட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை திருப்பத்தூரை அடுத்த குனிச்சியிலுள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, பறக்கும் படை தாசில்தார் சிவசுப்பிரமணியன், நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர் ஆகியோர் நாட்டறம்பள்ளி அருகே வேலூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அருகே வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கார் டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சுண்ணாம்பு குட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25), வெலதிகாமணி பகுதியை சேர்ந்த முருகேஷ் (47) என்பதும், ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது. அவர்களை இருவரும் கைது செய்யப்பட்டதோடு கார் மற்றும் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
இதேபோல் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, பச்சூர், கேத்தாண்டப்பட்டி, ஆம்பூர் உள்ளிட்ட ெரயில் நிலையங்களில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது. இந்த நிலையில் நேற்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த சாப்ஜி தெருவில் 30 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியை, வாணியம்பாடி தாலுகா போலீசாருடன், குடிமை பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் தொடர்பான நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 3 இடங்களில் மொத்தம் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story