திருமணம் செய்த 20 நாட்களில் வடமாநில காதல் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை-பரபரப்பு கடிதம் சிக்கியது
காதல் திருமணம் செய்த 20 நாட்களில் பள்ளிபாளையத்தில் வடமாநில தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு முன்பு அவர்கள் எழுதி வைத்திருந்த பரபரப்பு கடிதம் போலீசில் சிக்கியது.
பள்ளிபாளையம்:
காதல் திருமணம்
மேற்குவங்க மாநிலம் மெதினிபூரை சேர்ந்தவர் சுபஜித் (வயது 22). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு பகுதியில் தங்கி, அங்குள்ள ஒரு நூற்பாலையில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார். இவரும், மெதினிபூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி சம்பஜனா (17) என்பவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் சுபஜித் தனது சொந்த ஊரான மெதினிபூருக்கு சென்றார். பின்னர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது காதலியான சம்பஜனாவை, பெற்றோருக்கு தெரியாமல் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
போலீசில் புகார்
பின்னர் சுபஜித், தனது காதல் மனைவியான சம்பஜனாவை அழைத்து கொண்டு பள்ளிபாளையத்துக்கு வந்தார். அவர்கள் 2 பேரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே சம்பஜனாவின் பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் தங்களது மகளை சுபஜித் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று விட்டதாக தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் சுபஜித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.
இந்த புகார் குறித்து சுபஜித்தின் உறவினர்கள், நண்பர்கள் மூலம் அவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். மேலும் போலீசார் தன்னை கைது செய்து, சிறையில் அடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்து வந்தார். இது சம்பஜனாவுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
தூக்கில் பிணமாக தொங்கினர்
இந்தநிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் சுபஜித், சம்பஜனா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து, அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சுபஜித், சம்பஜனா ஆகியோர் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினர். இதையடுத்து போலீசார் அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு கடிதம்
மேலும், போலீசார் வீட்டில் சோதனை செய்த போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு காதல் தம்பதி எழுதி வைத்திருந்த பரபரப்பு கடிதம் சிக்கியது. அதில் போலீசார் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் கூறி இருந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 20 நாட்களில் வடமாநில காதல் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளிபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story