செயல்படாத குவாரிகள் உரிய வழிகாட்டுதல்படி மூடப்படுகிறதா?
குவாரிகள் உரிய வழிகாட்டுதல்படி மூடப்படுகிறதா என்பது தொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
ெசயல்படாத குவாரிகள் உரிய வழிகாட்டுதல்படி மூடப்படுகிறதா? என்பது தொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
3 சிறுவர்கள் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கோவில்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. இதில் முறையாக அனுமதி பெறாமலும் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படுகின்றன. அதில் பல குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த குவாரிகளை மூடும்போது அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மூடியுள்ளனர்..
இதனால் குவாரிகளில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி பல்வேறு விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டில் எங்கள் பகுதியில் உள்ள குவாரியில் தேங்கிய தண்ணீரில் என் மகன் உள்பட 3 சிறுவர்கள் குளிப்பதற்காக குதித்துள்ளனர். இதில் தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்களும் இறந்துவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் கீழவளவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
உரிய வழிகாட்டுதல்படி...
எனது மகன் இறந்த சமயத்தில் நான் வெளிநாட்டில் வேலை செய்தேன். இதனால் என்னால் உடனடியாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளேன். எனது மகன் இறப்பிற்கு சட்டவிரோதமான குவாரியும், உரிய வழிகாட்டுதல்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளதா? என்று கவனிக்கத்தவறிய தமிழக அரசும்தான் காரணம்.
எனவே எங்கள் பகுதியில் சரியாக மூடப்படாத குவாரிகளை உரிய வழிகாட்டுதல்களின்படி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எனது மகன் இறப்புக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எந்த பதிலும் இல்லை. எனவே எனது மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில் அளிக்க உத்தரவு
இந்த மனு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலாளர், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட தமிழக அரசின் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story