பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க கோரிக்கை
பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
நாமக்கல்:
ஆசிரியர்கள் இடமாறுதல்
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு நேற்று நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் அத்தியப்பன், மாவட்ட தலைவர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் சென்றனர். அவர்கள் அரசு தேர்வுகள் இணை இயக்குனர் (மேல்நிலைக்கல்வி) பொன்குமார், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ராமன் ஆகியோரிடம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்து வந்த பட்டதாரி ஆசிரியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்டு, தேவை உள்ள பள்ளிகளுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.
இவ்வாறு பணிநிரவல் மூலம் புதிய பள்ளிகளில் பணியில் சேர்ந்து பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாத ஊதியங்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
விடைத்தாள் மதிப்பீட்டு மையம்
அப்போது அதிகாரிகள் கூடுதல் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுவதற்கான கருத்துருக்கள் பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், விரைவில் ஆசிரியர்களுக்கு 2 மாத ஊதியங்களும் கிடைக்கும் என்றும் பதிலளித்தனர்.
தொடர்ந்து ராசிபுரத்தில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய துணை விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது சார்ந்து பதிலளித்த அரசு தேர்வுகள் இணை இயக்குனர் பொன்குமார், கல்வி மாவட்டத்தில் மட்டுமே விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ராசிபுரம் கல்வி மாவட்டமாக இதுவரை உருவாக்கப்படாததால் ராசிபுரத்தில் விடைத்தாள் திருத்தும் மையம் நடப்பாண்டில் ஏற்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் நடப்பாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அறை கண்காணிப்பாளர் பணி மிக அருகில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை கல்வித்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story