தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 April 2022 12:37 AM IST (Updated: 27 April 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


விபத்துகள் தடுக்கப்படுமா? 
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் திருச்சி முதல் சிதம்பரம் வரை அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் பொதுமக்களுக்கு அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. மேற்படி பாலம் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லை.  இதுவரை பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. போக்குவரத்தை சரி செய்ய போலீசார்  அப்பகுதியில் தொடர்ந்து பணியில் இருந்தாலும் சில அடாவடி ஓட்டுனர்கள் பொதுமக்களை கண்டு கொள்ளாமல் விபத்துகள் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் அதிகளவில் புழுதிகள் பறக்கிறது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து  வி.கைகாட்டியில் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் பேரிகார்ட் அல்லது வேகத்தடை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வி.கைகாட்டி, அரியலூர். 

சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் வாய்க்கால் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விஜயகோபாலபுரம் கிராமத்தில் பள்ளிக்கூடம் மற்றும் வீடுகள் அருகாமையிலுள்ள வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மேலும் இவற்றில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதினால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றிவிட்டு கான்கிரீட் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விஜயகோலபுரம், பெரம்பலூர். 

கனரக வாகனங்களால் சிதிலமடையும் சாலை 
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் பெரியாயி கோவில் ஓடையையொட்டி பாலாம்பாடி-அருமடல் இணைப்பு சாலை வரையிலான ஊராட்சி சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் காலை முதல் மாலை வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. அதோடு  மாலை முதல் இரவு தொடங்கும் வரை  ராஜிவ்காந்தி கேந்திரா சேவா மைய கட்டிடத்திலும், தொடக்கப்பள்ளியிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் "இல்லம் தேடி கல்வி திட்டம்" மூலம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.  இந்த சாலையில் கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்று வருவதினால் செங்குணம்  ஊராட்சியில் கட்டப்பட்ட கழிவுநீர் சாக்கடையானது சரிந்து விழுந்து பாழாகி பயனற்று காணப்படுகிறது. மேலும் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் அவ்வப்போது உடைவதுடன், சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.  இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர். 

ஆபத்தான மின்கம்பம் 
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வாழ்வார்மங்கலம் கிராமம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கன்னிமார் கோவில் அருகில் உள்ள 2 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடுபோல்  மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் அமைத்து இப்பகுதியில் மின்சார வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வாழ்வார்மங்கலம், கரூர்.


குண்டும், குழியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் இருந்து பிலிப்பட்டி வழியாக பெரியகுரும்பட்டி வரை செல்லும் சாலையானது  மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் இவ்வழியாக இலுப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு செல்கின்றனர். இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் அவசர காலங்களில் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள்  பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 சாலமன், இலுப்பூர், புதுக்கோட்டை. 

அரசு பஸ்கள் நின்று செல்லுமா? 
கரூர்-திருச்சி சாலையில் உள்ள காந்திகிராமத்தில் இரவு 9.30 மணிக்கு மேல் இந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள் எதுவும் நிற்காததால் காந்திகிராமப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வெளியூர் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்ப வேண்டும் என்றால் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் கிடைக்காமல் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டணத்தைவிட ஆட்டோவில் செல்ல ரூ.150 முதல் ரூ.200 வரை செலவாகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கரூர் காந்திகிராமம் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காந்திகிராமம், கரூர்.

சிதிலமடைந்த பயணியர் நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் போலீஸ் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தாமல் நிழற்குடைக்கு வெளியே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் இந்த பயணிகள் நிழற்குடை யாருக்கும் பயன்படாமல் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காரையூர், புதுக்கோட்டை. 

அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் புளியஞ்சோலை 
திருச்சி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில், மலையும், மலை சார்ந்த பகுதிகளும், நீரோட்டத்துடன் அடர்ந்த வனப்பகுதியுடன் காணப்படும் புளியஞ்சோலைக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் இப்பகுதியில் பெண்கள் குளித்த பின் தேவைப்படும் உடை மாற்றும் அறைகள், நீர்மின் திட்டத்தினால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது. புளியஞ்சோலையிலுள்ள கழிவறை வளாகங்கள் தண்ணீர் வசதியின்றி பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகின்றன. குடிநீருக்கான குழாய்கள்  உடைந்த நிலையில் மாதக்கணக்கில் குடிநீர் வசதியின்றி காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புளியஞ்சோலை, திருச்சி. 

ஆபத்தான கம்பிகள் 
திருச்சி மிளகுப்பாறை அரசு ஆதிதிராவிடர் பள்ளி முன்பு உள்ள சாலையில் கழிவுநீர் கால்வாயின் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் வகையில் உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மிளகுப்பாறை, திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சமலை திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் அமைந்துள்ளஒரே கிழக்கு தொடர்ச்சி மலையாகும். இதில் ஏராளமான மலைக்கிராமங்கள் இருக்கின்றன. பச்சமலை செல்வதற்கான மலைப்பாதை துறையூரிலிருந்து தம்மம்பட்டி செல்லும் சாலையில் உப்பிலியபுரத்திலிருந்து பிரிகிறது. மலையேறும் பாதையானது தமிழக அரசு வனத்துறையினரால் சோபனபுரம் என்ற கிராமத்தில் இருந்து ஆரம்பித்து வனத்துறை சோதனை சாவடி டாப் செங்காட்டுப்பட்டி, பூதக்கால் சாலை பிரிவு வரை 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டு தற்போது மலைவாழ்மக்களின்  அன்றாட  போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. கனமழை காரணமாக வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த சாலை கடுமையான சேதம் அடைந்து போக்குவரத்திற்கு கடும் சவால் அளிக்கும் வகையில் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பச்சமலை, திருச்சி. 

Next Story