கோவில்கள், குடியிருப்புகள் இடித்து அகற்றம்


கோவில்கள், குடியிருப்புகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 27 April 2022 12:38 AM IST (Updated: 27 April 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவில்கள் உள்பட குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

ராஜபாளையம். 
ராஜபாளையம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவில்கள்  உள்பட  குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டன. 
ஆக்கிரமிப்பு 
ராஜபாளையம்-தென்காசி சாலையில் சொக்கர் கோவில் அருகே கொண்டநேரி கண்மாய் அமைந்துள்ளது. நகராட்சியின் 30-வது வார்டுக்கு உட்பட்ட இப் பகுதியில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவிலான நீர் நிலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. தனி நபர்களால் குடியிருப்புகளாகவும், சிலர் கூட்டாக இணைந்து கோவில்கள் கட்டி இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். 
நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு, அப்பகுதியில் குடியிருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 
வாக்குவாதம் 
இந்தநிலையில் கடந்த 21 நாட்களுக்கு முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கோரி வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறாத காரணத்தால், அரசு மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கியது.
இந்த பணிகளை தொடங்கிய போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலர் ஒன்று திரண்டு, ேகாவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 மேலும் வசிக்க வேறு வீடு இல்லாத பெண்கள் வட்டாட்சியர் ராமச்சந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில், வருவாய் துறையினர், பொதுப்பணித் துறையினர், மின்சார வாரிய துறையினர், நகராட்சி துறையினர் ஆகியோர் இணைந்து ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவில்கள் இடிப்பு 
அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கோவில்கள், 8 வீடுகள், 2 கடைகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. நீதிமன்றத்தின் நடவடிக்கையால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Next Story