வனத்துறை இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்


வனத்துறை இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 27 April 2022 1:10 AM IST (Updated: 27 April 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

ராமேசுவரம்
ராமேசுவரம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
வனத்துறைக்கு சொந்தமான இடம்
ராமேசுவரம்-தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் இருந்து நம்புநாயகி அம்மன் கோவிலுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை உடனடியாக அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கடந்த மாதம் வனத்துறையினர் ராமேசுவரம்-தனுஷ்கோடி சாலையில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தனர்.
ஆனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு மாத கால அவகாசம் கொடுப்பதாகவும் அதற்குள் அகற்ற வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்த நிலையில் ராமேசுவரம்-தனுஷ்கோடி செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது நேற்று காலை 8 மணியிலிருந்து தொடங்கியது. மாவட்ட வனத்துறை அதிகாரி பகான்ஜெகதீஷ் சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் சேக்மன்சூர் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தீயணைப்பு நிலையம் அருகில் இருந்து நம்புநாயகி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதி வரையிலும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருந்த கருவாட்டு கம்பெனிகள், மீன்கள் காய வைக்கப்படும் தளங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 
காலை முதல் மாலை வரையிலும் நடந்த இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story