குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 27 April 2022 1:12 AM IST (Updated: 27 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் வராததை கண்டித்து கும்பகோணத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சமரசத்துக்கு பின் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கும்பகோணம்;
அதிகாரிகள் வராததை கண்டித்து கும்பகோணத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சமரசத்துக்கு பின் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். 
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் காலை 10 மணி முதல் கூட்டம் நடக்கும் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர். ஆனால் 11 மணியை கடந்த பிறகும் கூட்டத்தில் கலந்து கொள்ள அரசு துறை உயர் அதிகாரிகள் வரவில்லை. 
வெளிநடப்பு
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் விவசாயிகளை சமாதானம் செய்து கூட்டத்தை நடத்தினர். இதனால் நேற்று காலை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் லதா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர்கள் கவிதா திருவிடைமருதூர் சந்திரசேகரன் கும்பகோணம் மோகன் பாபநாசம் கார்த்திகேயன், தாசில்தார்கள்,  நுகர்பொருள் வாணிப கழக கண்காணிப்பாளர் சின்னதுரை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 தூர் வார கோரிக்கை
 கூட்டத்தில் கும்பகோணம் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க வேண்டும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை வாங்குவதற்காக அவசியமில்லாத பிற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
காவிரியில் தண்ணீர் வருவதற்கு முன்பாக இந்த பகுதி முழுவதும் உள்ள நீர்நிலைகள் பாசன வாய்க்கால்கள் வடிகால்கள் உள்ளிட்டவற்றை முழுவதுமாக தூர்வார வேண்டும், மின்வெட்டு காரணமாக கோடை சாகுபடியில் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். 
இந்த கோரிக்கைகளுக்கு பல்வேறு துறை அதிகாரிகள் பதில் அளித்து பேசினர். கும்பகோணம் கோட்டாட்சியர் லதா கோரிக்கைகளை  பரிசீலனை செய்து உரிய தீர்வு காணப்படும். உரத்தட்டுப்பாட்டை நீக்கி உரங்களை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Next Story