இயற்கை உரத்துக்காக ஆடு, மாட்டுக்கிடை அமைக்கும் பணி தீவிரம்
அதிராம்பட்டினம் பகுதியில் கோடை சாகுபடிக்கு உதவியாக இயற்கை உரத்துக்காக ஆடு, மாட்டுக்கிடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் பகுதியில் கோடை சாகுபடிக்கு உதவியாக இயற்கை உரத்துக்காக ஆடு, மாட்டுக்கிடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இயற்கை உரம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கோடையில் விளைநிலங்களில் செய்ய வேண்டிய பணிகளை விவசாயிகள் தற்போது செய்து வருகின்றனர். ஆழ்குழாய் கிணறு வசதி உள்ளவர்கள், மற்றும் ஏரி குளங்களில் உள்ள நீரை வைத்து சாகுபடி செய்பவர்கள் தற்போது கோடை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வயல்களில் தரிசு உழவு பணிகளையும் தொடங்கி உள்ளனர். அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சிலதினங்களுக்கு முன்பு மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டுள்ள விவசாயிகள் வயல்களில் ஆடு, மாட்டுக்கிடைகள் அமைத்து அதன் கழிவுகளை வயல்களில் சேர்க்க மும்முரம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் ஆர்வம்
நடவு செய்த பின்னர் வயல்களுக்கு பஞ்ச கவ்யம் தெளிப்பதை விட ஆடுக்கிடை வைப்பது பயன்தரும் என்று விவசாயிகள் நம்புகின்றனர். இதையடுத்து தற்போது விளைநிலங்களில் 'கிடை' கட்டுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பகல் முழுவதும் புற்களை மேயும் ஆடுகளை இரவு நேரங்களில் விளைநிலங்களில் ஓய்வெடுக்க விடுகின்றனர். அப்போது ஆடு, மாடுகளின் சாணம், சிறுநீர் ஆகியவை மண்ணில் கலந்துவிடுவதால் பயிர்களுக்கு நல்ல இயற்கை உரம் கிடைக்கிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து
இதனால் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம், மகிழங்கோட்டை, கருங்குளம், காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில் கிடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிடை அமைக்க ஆடுகள் ராமநாதபுரம், சிவகங்கை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து அதிராம்பட்டினம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story