பொதுத்தேர்வை 90,670 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்தமாதம் நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வை 90,670 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
தஞ்சாவூர்;
10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்தமாதம் நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வை 90,670 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு
கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் முறையாக திறக்கப்படாததால் பொதுத்தேர்வும் முறையாக நடத்தப்படவில்லை. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. தற்போது பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு அடுத்தமாதம் (மே) நடக்கிறது.
பிளஸ்-2
பிளஸ்-2 பொதுத்தேர்வு அடுத்தமாதம் (மே) 5-ந் தேதி தொடங்கி, 28-ந் தேதி முடிவடைகிறது. தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 107 மையங்களில் நடக்கிறது. 225 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 232 மாணவர்களும், 15 ஆயிரத்து 195 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 162 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடங்குவர். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 142 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
10-ம் வகுப்பு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தமாதம் 6-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 131 மையங்களில் நடக்கிறது. 411 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 509 மாணவர்களும், 15 ஆயிரத்து 780 மாணவிகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 289 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 247 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடங்குவர். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 161 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-1
பிளஸ்-1 பொதுத்தேர்வு அடுத்தமாதம் 10-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு 107 மையங்களில் நடக்கிறது. 227 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 677 மாணவர்களும், 15 ஆயிரத்து 277 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 954 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 178 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடங்குவர். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 150 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் பாதுகாப்பு
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பழனிவேலு கூறும்போது, இந்த பொதுத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலெக்டரின் வழிகாட்டுதலின்படி முதன்மைக்கல்வி அலுவலரின் மேற்பார்வையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story