தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 27 April 2022 2:19 AM IST (Updated: 27 April 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது 
சேலம் மாநகராட்சி 12-வது வார்டு மணக்காடு ராஜகணபதி நகரில் இரும்பு மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் இருந்தது. இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-ராமஜெயம், 12-வது வார்டு, சேலம்.
சேதமடைந்த மின்கம்பம் 
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடனே நிற்கிறார்கள். எனவே பழுதடைந்து காணப்படும் அந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், கந்திகுப்பம், கிருஷ்ணகிரி.
போதுமான புத்தகங்கள் இல்லாத நூலகம்
தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த திருக்கைலாயபுரம் கிராமத்தில் நூலகம் உள்ளது. இங்கு போதுமான புத்தகங்கள் இல்லை. இதுதவிர மின்சாரம், மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாணவர்கள், இளைஞர்கள் நலன் கருதி நூலகத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், திருக்கைலாயபுரம், தர்மபுரி.
தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்
நாமக்கல் நகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் மின்மோட்டார் அறை உள்ளது. இதில் இருந்து மின்மோட்டாரை இயக்கி அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மோட்டார் அறைக்கு வரும் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நகராட்சி அதிகாரிகள் அதனை சரி செய்ய வேண்டும்.
-குமார், நாமக்கல்.
அகற்றப்படாத குடிநீர் தொட்டி 
சேலம் காடையாம்பட்டியை அடுத்த முள்ளிச்செட்டிப்பட்டியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. பல ஆண்டுகள் ஆகியும் அதன் அருகே உள்ள பழைய குடிநீர் தொட்டி அக்கற்றபடவில்லை. சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், முள்ளிச்செட்டிப்பட்டி, சேலம்.
கூடுதல் டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மேச்சேரிக்கு குறைந்த எண்ணிக்கையில் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. சிந்தாமணியூர், பஞ்சுகாளிபட்டி, பச்சனம்பட்டி, கரும்பாலை, கருப்பூர், மாமாங்கம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் நீண்ட நேரம் காத்திருந்தும் 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டி சூழ்நிலை உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மேச்சேரி-சேலம் புதிய பஸ் நிலையத்திருக்கு கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரை, மேச்சேரி, சேலம்.
ஏரிநீரில் கலக்கும் கழிவுநீர்
சேலம் மாநகராட்சி 20-வது வார்டு போடிநாயக்கன்பட்டி ஏரியில் ஆகாயத்தாமரை முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளது. அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. குப்பை கழிவுகளை ஏரியில் கொட்டி வருகின்றனர். இதனால் ஏரி தண்ணீர் மிகவும் மாசடைந்து உள்ளது. இதன் காரணமாக அருகே உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆண்ட்ரோஸ், ஆண்டிப்பட்டி, சேலம்.

Next Story