போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து நீதி விசாரணை; காங்கிரஸ் வலியுறுத்தல்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
யாரையும் மாற்றவில்லை
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் 3 கட்டமாக தவறுகள் அரங்கேற்றப்பட்டு உள்ளன. இந்த முறைகேடுகளை ஒருவரால் மட்டும் செய்ய முடியாது. முறைகேடு நடந்த கலபுரகி மைய பள்ளி கட்டிடம் பா.ஜனதா பெண் நிர்வாகி திவ்யாவுக்கு சேர்ந்தது. அவர் பா.ஜனதாவில் அனைத்து தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.
அந்த பெண் நிர்வாகி சில இடைத்தரகர்களுடன் சேர்ந்த இந்த முறைகேடுகளை செய்துள்ளார். இதுவரை தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்யவில்லை. போலீஸ் நியமன கூடுதல் டி.ஜி.பி. உள்பட அதிகாரிகள் யாரையும் மாற்றவில்லை. அவர்கள் அதே இடத்தில் பணியில் நீடிப்பதால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் பணி இடமாற்றம் கூட செய்யவில்லை.
மூடிமறைக்க முயற்சி
இந்த முறைகேட்டில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்களை காப்பாற்ற போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தீவிரமாக முயற்சி செய்கிறார். இந்த முறைகேட்டில் போலீஸ் மந்திரிக்கும் தொடர்பு இருக்கும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் நிர்வாகி முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே சி.ஐ.டி. அதிகாரிகள் எங்கள் கட்சியின் முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கேவுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளனர்.
இந்த சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடுகளை அம்பலப்படுத்தியவரே அவர் தான். இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதினார். அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டதா?. இந்த முறைகேடு விவகாரத்தை மூடிமறைக்க இந்த அரசு முயற்சி செய்கிறது.
பணி இடைநீக்கம்
மொத்தம் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களில் 250 இடங்கள் ஆதரவாளர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள், பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்த விசாரணை சரியான முறையில் நடைபெறவில்லை. தவறு செய்த அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய முதல்-மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டாலும், மூடி மறைத்து விடுவார்கள். ஏனென்றால் அங்கும் பா.ஜனதா அரசு தான் உள்ளது. அதனால் இந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போது தான் உண்மைகள் வெளிவரும்.
இவ்வாறு ராமலிங்கரெட்டி கூறினார்.
Related Tags :
Next Story