கர்நாடகத்தில் பிளாக் காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கு மே 29-ந் தேதி முதல் தேர்தல்; டி.கே.சிவக்குமார் அறிவிப்பு
கர்நாடகத்தில் பிளாக் காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கு மே மாதம் 29-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விசாரணைக்கு அழைக்கட்டும்
என்னுடன் இருப்பது போல் சப்-இன்ஸ்பெக்டர் முறைகேட்டில் தொடர்பு உடைய பா.ஜனதாவை சேர்ந்த பெண்ணின் படம் வெளியாகியுள்ளது. என்னை பலர் சந்திக்கிறார்கள். அப்போது புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள். அந்த புகைப்படம் பற்றி எனக்கு தெரியாது. போலீசார் என்னையும் விசாரணைக்கு அழைக்கட்டும். கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்காக தேர்தல் அதிகாரியாக சுதர்சன நாச்சியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அதிகாரிகளாக கேரளாவை சேர்ந்த ஜோசப் ஆப்ரகாம், சத்தீஸ்கரை சேர்ந்த மோதிலால் தேவானந்த் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி வாக்காளர் பட்டியல் அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. 78 லட்சம் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
பூத் குழுக்கள்
இதன் மூலம் நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் காங்கிரசுக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். பூத் மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அதன் பிறகு பிளாக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மே மாதம் 29-ந் தேதி முதல் ஜூன் 10-ந் தேதி வரை தேர்தல் நடைபெறும். அதன் பிறகு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும். பின்னர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் தோ்தல் நடைபெறும்.
இந்த தேர்தல்களை நடத்த மொத்தம் 40 பேர் கொண்ட குழு வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருகிறது. வருகிற மே 1-ந் தேதி முதல் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி மீண்டும் தொடங்குகிறது. ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story