பா.ஜனதா அரசை குறை சொல்ல சித்தராமையாவுக்கு தகுதி இல்லை; நளின்குமார் கட்டீல் பேட்டி


பா.ஜனதா அரசை குறை சொல்ல சித்தராமையாவுக்கு தகுதி இல்லை; நளின்குமார் கட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 27 April 2022 2:53 AM IST (Updated: 27 April 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளி கலவரம் தொடர்பாக பா.ஜனதா அரசை குறை சொல்ல சித்தராமையாவுக்கு தகுதி இல்லை என்று நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.

பெங்களூரு:

வழக்குகள் வாபஸ்

  கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், நேற்று உப்பள்ளிக்கு சென்று அங்கு கலவரம் நடந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  சித்தராமையா ஆட்சி காலத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதிகளவில் கலவரங்கள் நடைபெற்றன. சிறையிலும் கைதிகள் கொலை செய்யப்பட்டனர். அவர் திறனற்ற ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அவர், மந்திரி அரக ஞானேந்திராவை திறனற்றவர் என்று கூறியது சரியல்ல.

சித்தராமையாவுக்கு தகுதி இல்லை

  உப்பள்ளி கலவரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தவறு செய்தவர்கள் மீது தீவிரமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சித்தராமையா ஒரு திறனற்ற தலைவர். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது செய்த தவறுகளால் தான் இன்று கலவரங்கள் ஏற்படுகின்றன. அவரது ஆட்சியில் கேரளாவில் இருந்த வந்து இங்கு இந்துக்கள் மீது தாக்குதல் ஏற்படுத்தினர். அதனால் பா.ஜனதா அரசை குறை சொல்ல சித்தராமையாவுக்கு தகுதி இல்லை.

  உப்பள்ளியில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதை எங்கள் அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. உணர்வுகள் காயப்படுத்தப்பட்டதால் நடந்த கலவரம் நடக்கவில்லை. போலீஸ் நிலையம், இந்து கோவில்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு காரணமானவர்களை விட மாட்டோம். சில அமைப்புகளின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
  இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

Next Story