கூடலூரில் கோடை விழா நடத்துவதற்கு செக்சன்- 17 நிலத்தில் வருவாய்த்துறையினர் புதியதாக சாலை அமைப்பு


கூடலூரில் கோடை விழா நடத்துவதற்கு செக்சன்- 17 நிலத்தில் வருவாய்த்துறையினர் புதியதாக சாலை அமைப்பு
x
தினத்தந்தி 27 April 2022 5:09 PM IST (Updated: 27 April 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கோடை விழா நடத்துவதற்காக செக்சன் - 17 நிலத்தில் புதியதாக சாலை அமைக்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது

கூடலூர்

கூடலூரில் கோடை விழா நடத்துவதற்காக செக்சன் - 17 நிலத்தில் புதியதாக சாலை அமைக்கும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

செக்சன் - 17 நிலம்

கூடலூர் பகுதியில் வருவாய் அல்லது வனத்துறைக்கு என ஒதுக்கப்படாத நிலத்தை சட்டப்பிரிவு - 17ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் அடிப்படை வளர்ச்சி மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் ஓவேலி பேரூராட்சி உள்பட பெரும்பாலான இடங்களில் வளர்ச்சி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓவேலி பேரூராட்சி பகுதியில் அடிப்படை பணிகள் மேற்கொள்வதற்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல பொதுமக்களில் சிலர் முயன்றனர். இதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஆர்டிஓ தலைமையிலான நேற்று முன்தினம் முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளதால் சட்டப்பிரிவு 17 நிலத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்வதற்கு முடியாத நிலை உள்ளது. இருப்பினும் சிறிய அளவிலான பணிகள் மேற்கொள்ள கலெக்டரிடம் பரிந்துரை செய்து தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.

புதிய சாலை அமைப்பு

ஆனால் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஓவேலி மக்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் கூடலூரில் கோடை விழா நடத்துவதற்கான பணிகளை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர். வழக்கமாக நடைபெற்று வந்த தனியார் பள்ளி மைதானத்துக்கு பதிலாக மற்றொரு தனியார் பள்ளி மைதானத்தை வருவாய்த்துறையினர் தேர்வு செய்துள்ளனர். மேலும் சட்டப்பிரிவு 17 கீழ் உள்ள நிலத்தில் புதியதாக சாலை அமைக்கும் பணியையும் பொக்லைன் எந்திரங்களை கொண்டு வருவாய்த்துறையினர் அமைத்து வருகின்றனர்.
ஏற்கனவே மைதானத்துக்கு செல்லும் வகையில் சாலை வசதி இருக்கின்ற சூழலில், சட்டப் பிரிவுகளின் கீழ் உள்ள நிலத்தில் புதியதாக சாலை அமைக்க வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தேர்வு காலங்களில் கோடை விழா நடத்துவதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் சட்டப் பிரிவு- 17 நிலத்தில் செயல்படும் தனியார் பள்ளிக்கூடங்களில் கோடை விழா நடத்த அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

சட்டத்தை மீறிய செயல்

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அதன் மைதானத்தில் போதிய அளவு இடவசதி உள்ளது. ஆனால் அரசு பள்ளியை அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். சட்டப்பிரிவு 17 நிலத்தில் வளர்ச்சிப்பணிகள் செய்யத் தடை இருப்பதாக அதிகாரிகள் கூறி வரும் சூழலில் கோடை விழா நடத்துவதற்கு மட்டும் புதிய சாலை அமைப்பதால் சட்டத்தை மீறிய செயல். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, கோடை விழா நடக்கும் நாட்களில் தேர்வுகள் நடக்க உள்ளது. இதனால் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என கருதி புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story