சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் கங்காதீசுவரர் கோவில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ், சென்னை புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை,
சென்னை, புரசைவாக்கத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கீழ் கங்காதீசுவரர் கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் உள்ள தெப்பக்குளத்தை சீரமைக்கும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறையின் சார்பில், இந்த கோவில் தெப்பக்குளத்தில் தூர்வாருதல், குளத்தை சுற்றிலும் கரைகளை பலப்படுத்துதல், கருங்கல் படிக்கட்டுகள் அமைத்தல், கரைகளை சுற்றி நடைபாதை அமைத்து மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது.
கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் அமைத்து அவற்றிலிருந்து வரும் மழைநீரினை, கோவில் தெப்பக்குளத்தில் சேமிக்க மழைநீர் இணைப்புகள் அமைக்கவும், மழைநீர் இணைப்புகளில் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு சுத்தமான நீர் கோவில் குளத்தில் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அரசு முதன்மைச் செயலாளரான மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், மத்திய வட்டார துணை கமிஷனர்கள் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், அண்ணாநகர் மண்டல தலைவர் கூ.பி.ஜெயின், நியமனக்குழு உறுப்பினர் வேலு, கவுன்சிலர் இளம்சுருதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, ‘சிங்கார சென்னை திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு ரூ.500 கோடி வழங்கி உள்ளார். தொடர்ந்து இந்த ஆண்டும் முதல்-அமைச்சர் ரூ.500 கோடி வழங்கி உள்ளார். அதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மழைநீர் கட்டமைப்புகள், சாலைகள் சீரமைப்பது மற்றும் குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, கரைகளும் பலப்படுத்தப்பட உள்ளன.
அந்த வகையில் கங்காதீசுவரர் கோவில் தெப்பக்குளம் ரூ.1.58 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு, மழைநீர் வடிக்கட்டப்பட்டு நல்ல நீராக தெப்பக்குளத்திற்கு வரும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது’ என்றார்.
இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, ‘கங்காதீசுவரர் கோவில் ராஜகோபுரம், அம்பாள் சந்நிதி மற்றும் பிற சந்நிதிகளுக்கு பஞ்சவர்ணம் பூசும் பணிகள், சுற்றுப்பிரகாரத்தில் கருங்கல் பதிக்கும் பணிகள், மேற்கூரையில் தளஓடுகள் பதிக்கும் பணிகள் ரூ.58.60 லட்சம் செலவில் செய்யப்படுகிறது.
அத்துடன் நல்ல வடிவமைப்பில் மரத்தேர் ரூ.15 லட்சம் செலவில் செய்வதற்கான பணிகள், கோவில் நந்தவனம் சீரமைக்க ரூ.17 லட்சம் மதிப்பில் பணிகள், மின்சார பணிகள் ரூ.15.60 லட்சம் செலவிலும், காரியக் கொட்டகை கட்டும் பணிகளுக்காக ரூ.52.50 செலவிலும், சுவாமி புறப்பாடு வாகனங்கள் புதுப்பிக்கும் பணிகள் என மொத்தம் ரூ.3 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன’ என்றார்.
Related Tags :
Next Story