நாட்டுக்கு அதிக வரி பங்களிப்பை செய்யும் மராட்டியத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது- பிரதமர் மோடிக்கு, உத்தவ் தாக்கரே பதில்


உத்தவ் தாக்கரே
x
உத்தவ் தாக்கரே
தினத்தந்தி 27 April 2022 6:06 PM IST (Updated: 27 April 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

நாட்டுக்கு அதிக வரி பங்களிப்பை செய்யும் மராட்டியத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து உள்ளார்.

மும்பை, 
நாட்டுக்கு அதிக வரி பங்களிப்பை செய்யும் மராட்டியத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து உள்ளார்.
 பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 
அந்த சந்தர்ப்பத்தில் அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் குறித்தும் பேசினார். இதுபற்றி மோடி கூறுகையில், “மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் உற்பத்தி வரியை குறைத்த போதிலும், சில மாநில அரசுகள் (எதிர்க்கட்சிகள் ஆள்பவை) தங்களது மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்கவில்லை. எனவே, அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அனுபவித்து வருகின்றனர். வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் அநீதி இழைக்கப்பட்டு உள்ளது” என்றார்.
மராட்டியம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பெயரை குறிப்பிட்டு மோடி இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.  
 உத்தவ் தாக்கரே பதில்
இந்த கூட்டத்திற்கு பிறகு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அலுவலம் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய அளவில் நேரடி வரி வசூலில் மராட்டிய அரசின் பங்களிப்பு 38.3 சதவீதமாகும், ஜி.எஸ்.டி. வசூலில் எங்களது பங்கு 15 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் மத்திய அரசு மராட்டிய மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மராட்டிய அரசுக்கு ரூ.26 ஆயிரத்து 500 கோடி வரி பங்கை தராமல் பாக்கி வைத்துள்ளது. 
மராட்டிய மக்களின் கவலைகளை விரிவாக நான் பகிர்ந்து கொள்கிறேன். பல்வேறு பொருட்கள் மீதான மத்திய வரியில் 5.5 சதவீதத்தை மராட்டியம் பெறுகிறது. வாட் மற்றும் மத்திய வரிகளை சேர்த்தால் மராட்டியம் நாட்டில் அதிகப்பட்ச தொகையை வசூலித்து உள்ளது. மராட்டியம் வரி வசூலில் அதிக பங்களிப்பை அளித்த போதிலும், மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது.
மாநில அரசு காரணம் அல்ல
மும்பையில் விற்கப்படும் ஒரு லிட்டர் டீசலில் மத்திய அரசு ரூ.24.38-ம், மாநில அரசு ரூ.22.37-ம் பெறுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசுக்கு 31.58-ம், மராட்டிய அரசுக்கு ரூ.32.55-ம் கிடைக்கிறது. மாநில அரசால் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. 
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. 
------------


Next Story